

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'ஹிட்லர்' என விமர்சனம் செய்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி மீது சனிக்கிழமை பாஜக தொண்டர்கள் முட்டை வீசினர். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவருமான நடிகர் சிரஞ்சீவி, சனிக்கிழமை ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பந்தர் பகுதியில் கோனேரு கூட்டு ரோடு பகுதியில் சிரஞ்சீவி பேசுகையில், "பாஜக ஒரு மதவாத கட்சி. இதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டியவர்" என தீவிரமாக குற்றஞ்சாட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜக தொண்டர்கள் சிலர், சிரஞ்சீவி மீது முட்டை வீசினர். இந்த முட்டைகள் சிரஞ்சீவி பயன்படுத்திய வேனின் மீது விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் தனது பிரச்சாரத்தை நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் முட்டை வீசிய 2 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.