

தேயிலை விவசாயமும் சுற்றுலாவும் நீலகிரி தொகுதியின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மலைப்பகுதியில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமவெளிப் பகுதியில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தின் ஒரு தொகுதியும் இந்த மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
நீலகிரியில் 2009-ல் எம்.பி.யாக இருந்த ஆ.ராசா தொகுதிக்காகப் பணியாற்றியுள்ளார். அவர் டெல்லியில் இருந்தாலும்கூட உதவியாளர்கள் மூலம் மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு நிறைய செய்துள்ளார். ஆனால் இப்போது எம்.பி.யாக இருக்கும் கோபாலகிருஷ்ணன் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ராசா சிறையில் இருந்தபோதும் கூட அவரே தேவலாம் என்ற மனநிலையில் மக்கள் இருந்தனர். தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜனுக்கு ராசா அளவுக்கு திறமை போதாது என்றே கூறப்படுகிறது. பொள்ளாச்சியில் ஏற்கெனவே ஒருமுறை வென்று, ஒருமுறை தோற்றவர்.
கூடலூர், பவானிசாகர், அவிநாசி ஆகிய தொகுதிகள் தனித்தொகுதிகள். அங்கு தாழ்த்தப்பட்டவர்களே அதிகம் வசிக்கின்றனர். அவிநாசி - அத்திக்கடவு திட்டம் காலிங்கராயன் வாய்க்கால் வழியே குழாய் மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அவிநாசி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல மேட்டுப்பாளையத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகளும் ராசாவுக்கே செல்லும் நிலை உள்ளது.
இதுதவிர ராசா களத்தில் ஏராளமாகப் பணியாற்றி இருக்கிறார். 6 மாதங்களுக்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு அவர் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் ரேஸில் ஆ.ராசா முன்னணியில் உள்ளார்.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
நீலகிரி தொகுதியில் களம் காணும் திமுக வேட்பாளர் ஆ.ராசா மீண்டும் வெற்றிக் கனியைப் பறிப்பார் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 2-ம் இடத்திலும், அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி 3-ம் இடத்திலும் உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: