

மக்களவைத் தேர்தலில் போட்டி யிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு கோவையில் அறிவித்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர் களையும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட் பாளர்களையும் அவர் அறிவித் தார். அக்கட்சி சார்பில் வெளியிடப் பட்ட தேர்தல் பிரகடனத்தில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங் கும் என உறுதி அளிக்கப்பட் டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டி யிடும் 21 வேட்பாளர்களை கடந்த 20-ம் தேதி சென்னையில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் (இந்திய குடியரசுக் கட்சி) எம்.தங்கராஜ், திருவண்ணா மலை ஆர்.அருள், ஆரணி வி.ஷாஜி, கள்ளக்குறிச்சி கணேஷ், நாமக்கல் ஆர்.தங்க வேலு, ஈரோடு சரவணகுமார், ராமநாதபுரம் ஜே.விஜயபாஸ்கர், பெரம்பலூர் வி.அருள்பிரகாசம், தஞ்சாவூர் ஆர்.எஸ்.சம்பத், சிவகங்கை கவிஞர் சினேகன், மதுரை எம்.அழகர், தென்சென்னை ரங்கராஜன், கடலூர் வி.அண்ணா மலை, விருதுநகர் முனியசாமி, தென்காசி முனீஸ்வரன், திருப்பூர் வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சி ஆர்.மூகாம்பிகை, கோவை டாக்டர் ஆர்.மகேந்திரன் ஆகியோர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களாக பூந்தமல்லி பூவை ஜெகதீஷ், பெரம்பூர் வி.பிரியதர்ஷினி, திருப்போரூர் ஏ.வி.கருணாகரன், சோளிங்கர் கே.எஸ்.மலைராஜன், குடியாத்தம் பி.வெங்கடேசன், ஆம்பூர் நந்தகோபால், ஒசூர் ஜெயபால், பாப்பிரெட்டிப்பட்டி எம்.நல்லதம்பி, அரூர் குப்புசாமி, நிலக்கோட்டை கே.சின்னதுரை, திருவாரூர் கே.அருண்சிதம்பரம், தஞ்சாவூர் துரையரசன், மானாமதுரை ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி தங்கவேல், பெரியகுளம் பிரபு, சாத்தூர் எம்.சுந்தர்ராஜ், பரமக்குடி உக்கிரபாண்டியன், விளாத்திகுளம் டி.நடராஜன், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீதர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
கட்சிகள் மீது கடும் விமர்சனம்
ட்விட்டரிலேயே அரசியல் செய்துகொண்டிருந்த தன்னை நேரடி அரசியலில் ஈடுபடத் தூண்டியதாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம், அனிதா மரணம், பண மதிப்பு நீக்கம், தூத்துக்குடி சம்பவம் உள்ளிட்டவை காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன் பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் மற்றும் அக்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
முன்னதாக, கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரகடனத்தை அவர் வெளியிட்டார். 5 ஆண்டு களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்த மான குடிநீர் வசதி, 5 ஆண்டு களில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, 500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைப்பு, 60 லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுதல், விவசாயம், தொழில் துறையின் மேம்பாட்டுக்கானத் திட்டங்கள், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம், லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்தல், உலகத் தமிழர்களின் நலனைப் பாதுகாத்தல், மாநிலத்தில் கூட்டாட்சி முறை, பெண்கள், குழந்தைகள் நலன் பேணுதல், தரமான கல்வி, மருத்துவம் வழங்குதல், மாநில ஆளுநரை எம்எல்ஏ-க்களே தேர்ந்தெடுத்தல் என ஏராளமான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் பிரகடனத்தையும் அவர் வெளியிட்டார்.