

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பின் முக்கிய அறிவிப்புகளை அதிகாரியே வெளியிட வேண்டும் தவிர அமைச்சர் அல்ல என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார். இதை அவர், பிரதமர் நரேந்திர மோடியின் 'மிஷன் சக்தி' அறிவிப்பின் மீது தனது கருத்தாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசிய எஸ்.ஒய்.குரேஷி கூறும்போது, ''தேர்தல் நடத்தை அமலுக்குப் பின் அரசு, வாக்காளர்களைக் கவரும் வகையில் எந்தவிதமான புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது. இதுபோன்றவைக்கு அனுமதி கேட்கப்பட்டால் அவற்றை வெளியிடாமல் ஆணையம் காத்திருப்பில் வைக்கும்'' எனத் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையில் கிளம்பி வரும் சந்தேகங்கள் குறித்து குரேஷி, ''ஒருவேளை அந்த அறிவிப்பைக் காத்திருப்பில் வைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்குமா? என ஆணையம் கண்டறிவது உண்டு. இது உண்மையாக இருப்பின் அதை அறிவிக்க அத்துறையின் அதிகாரியே போதுமானது. இதற்கு அதன் அமைச்சர் தேவை இல்லை. இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது தடை செய்யப்பட்டு விடும்'' என விளக்கம் அளித்தார்.
ஹரியாணா மாநில ஐஏஎஸ் அதிகாரியான குரேஷி, கடந்த 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையராகப் பதவி வகித்தவர். அவரது பதவிக்காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் குரேஷி விளக்கினார்.
இது குறித்து அவர் கூறும்போது, ''மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட எனது அனுபவத்தில் பிரதமர் அலுவலகம் அனுமதி கேட்டிருக்கிறது. அதில், இந்த அறிவிப்பினால் பிரச்சனை வருமா? எனவும் கேட்பது உண்டு. ஏனெனில், எந்த பிரதமரும் ஒரு அறிவிப்பினால் தர்மசங்கடத்திற்கு உள்ளாவதை விரும்புவதில்லை. மிஷன் சக்தியைப் பொறுத்தவரை அது சம்மந்தப்பட்ட துறையான ராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின்(டிஆர்டிஓ) அதிகாரி அதன் அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்'' எனத் தெரிவித்தார்.
ஆணையத்தின் விளக்கம்
இதனிடையே, மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையரான சந்தீப் சக்ஸேனா, மிஷன் சக்தி அறிவிப்புக்கு எனக் குறிப்பிட்டு பிரதமர் அலுவலகம் அனுமதி கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் விசாரணை
பிரதமர் மோடி புதன் கிழமை அறிவித்த 'மிஷன் சக்தி' விவகாரத்தில் அதிகாரிகள் குழு அமைத்து ஆராய்ந்து வருகிறது. இக்குழு தன் அறிக்கையை இன்று ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.