

உ.பி.யில் தீவிரப் பிரச்சாரம் செய்துவரும் பிரியங்கா வதேரா, படகை அடுத்து ரயிலில் பயணம் செய்கிறார். இதற்காக தனது அயோத்தி பிரச்சாரத்தில் மாற்றம் செய்துள்ளார்.
காங்கிரஸின் பொதுச்செயலாளராக அமர்த்தப்பட்ட பிரியங்கா, மக்களவைக்கு தம் கட்சியின் வெற்றிக்காக உ.பி.யில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது பயணப்படி நேற்று தம் தாய் சோனியா காந்தியின் ரேபரேலியில் பிரச்சாரம் தொடங்குவதாக இருந்தது. மறுநாள் சகோதரர் ராகுலின் அமேதியிலும் அதை முடித்து இரவு அயோத்தி செல்வதாகவும் அமைந்தது.
இதில் திடீர் என மாற்றம் செய்த பிரியங்கா இன்று இரவு டெல்லியில் இருந்து நேரடியாக பைஸாபாத் செல்கிறார். இதற்காக கைபியாத் எக்ஸ்பிரஸ் எனும் ரயிலில் பயணம் செய்கிறார். பைஸாபாத்தில் இறங்கி அயோத்தியின் அனுமர் கோயிலில் தரிசனம் முடித்து தன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அயோத்தி அமைந்துள்ள பைஸாபாத் தொகுதியில் தம்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான நிர்மல் கத்ரிக்கு பிரச்சாரம் செய்கிறார் பிரியங்கா.
இதற்காக பிரியங்கா செய்யும் ரயில் பயணத்தின் பின்னணியில் ஒரு ரகசியம் பேசப்படுகிறது. இந்த கைபியாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆசம்கர் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளுக்கு செல்லும் முஸ்லிம்கள் பயணம் செய்வது அதிகம். இதனால், அவர் முஸ்லிம்கள் இடையே ரயிலில் பிரச்சாரம் செய்தபடி செல்வார் எனக் கூறப்படுகிறது.
இதற்குமுன், பிரயாக்கின் அனுமர் கோயிலில் பூஜை செய்த பின் வாரணாசியில் இருந்து படகில் பயணம் செய்தபடி பிரச்சாரம் செய்திருந்தார் பிரியங்கா. அதேபோல், படகை அடுத்து பிரியங்கா இன்று பிரச்சாரம் செய்ய ரயில் பயணம் தேர்வு செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.