

தேர்தலுக்குப் பின் மத்திய அரசு அமைவதில் பிஜூ ஜனதா தளம் (பிஜேடி) முக்கிய பங்கு வகிக்கும் என்று கட்சியின் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்
ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பிஜேடி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நயாகர் என்ற இடத்தில் நவீன் பட்நாயக் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் நவீன் பட்நாயக் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. தேர்தலுக்குப் பின் மத்திய அரசு அமைவதில் பிஜேடி முக்கிய பங்கு வகிக்கும். இது நமக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு. மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பிஜேடி விளங்கும். ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் எல்லா இடங்களிலும் பிஜேடி வெற்றிபெறும்.
ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாம் போராடி வருகிறோம். மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி கிடைக்கும். ஒடிசாவில் இருந்து ரயில்வேத் துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், ரூ. 1000 கோடி மட்டுமே மாநிலத்துக்கு கிடைக்கிறது. ஒடிசாவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டுவோம்.
இவ்வாறு நவீன் பட்நாயக் பேசினார்.