நேயர்களை நடுங்கவைத்த நடத்தை விதிமுறைகள்!

நேயர்களை நடுங்கவைத்த நடத்தை விதிமுறைகள்!
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றாலே அரசியல் கட்சிகளுக்குக் கொஞ்சம் கிலிதான். கொடி கட்டுவதில் தொடங்கி, சுவர் விளம்பரம், வாக்கு சேகரிப்பு, பிரியாணி வாங்கித் தருவது என ஒவ்வொரு விஷயத்திலும் தேர்தல் ஆணையம் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துகொண்டிருக்கும். எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகளுக்கு வேப்பங்காயாகக் கசப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், விதிமுறைகளைக் கண்டு மக்களும் அஞ்சிய காலம் உண்டு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம் அது.

இப்போதுபோல தொலைக்காட்சிகளோ கேபிளோ, டிடிஎச், டிஜிட்டல் சேவை வசதிகளோ அப்போது இல்லை. தூர்தர்ஷன் மட்டுமே காணக் கிடைக்கும். வெள்ளிக்கிழமை இரவில் வரும் ‘ஒளியும் ஒலியும்’ பாடல்களுக்காகவும், ஞாயிறு மாலையில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்துக்காகவும் ஊரே காத்திருக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகளில் உள்ள/அரசியல் சார்புடைய நடிகர், நடிகையரின் படங்கள், பாடல்கள் எதையும் காட்ட மாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி,

எஸ்எஸ்ஆர். ஜெயலலிதா போன்றோரின் படங்களையும் பாடல்களையும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். டி.ராஜேந்தர், பாக்யராஜ் ஆகியோருடைய புதிய பாடல்களும்கூட(!) அனுமதிக்கப்படாது.

அரசியல் பின்னணி இல்லாதவர்களின் படங்களையும் பாடல்களையும்தான் தூர்தர்ஷனில் காட்டுவார்கள். ஜெமினி கணேசன் நடித்த படங்கள் அதிகம் ஒளிபரப்பாகும். ‘விருது’ படங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் போடுவார்கள்.

‘பஞ்சாயத்து டிவி.’யைப் பார்க்கக் குவியும் பார்வையாளர் கூட்டம், தேர்தல் காலத்தில் மட்டும் காணாமல்போய்விடும். வானொலியிலும் அதே கதைதான். தேர்தல் அறிவித்த உடனே, அரசியல் பின்னணி கொண்ட நடிகர்/நடிகைகளின் தீவிர ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்ததெல்லாம் உணர்வுபூர்வமான கனாக் காலம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in