

வரும் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் கடந்த 24-ம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 28-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள மக்களவை, இடைத்தேர்தல் நடைபெறும் சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர், தூத்துகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர்,ராமநாதபுரம், மதுரை ஆகிய மக்களவை தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.
வருகின்ற 29-ம் தேதி விழுப்புரம் மக்களவை தொகுதியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு பதிலாக வடிவேல் சரவணன் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை தொடர்புகொண்டு கேட்டபோது, வேட்பாளர் பெயர் முழுமையாக தெரியாவிட்டால், ஒரு முறை தெளிவுப்படுத்திக்கொண்டு இருக்கலாம். தேர்தல்களில் வேட்பாளர் பெயரைவிட கட்சியும், அதன் சின்னமே வாக்காளர் மனதில் நிற்கும் என்றார்.