

ஜார்க்கண்ட் மக்களின் வன உரிமைச் சட்டம் தொடர்பான கவலைகளைக் கோடிக்காட்டும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன், ‘வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயத் துறை பிரச்சினைகளை புல்வாமா சம்பவம் மறக்கடித்துவிடாது’ என்கிறார்.
மாநிலத்தில் நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டுவரும் சில இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். ராஞ்சியில் எங்களுடைய ‘குருஜி’ (தந்தையும் முன்னாள் முதல்வருமான சிபு சோரன்) முன்னிலையில் அறிவிக்க விரும்புகிறோம்.
நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் பிரச்சினைகள் என்ன?
நிலம் கையகப்படுத்தல், வன உரிமைச் சட்டம் இரண்டும் முக்கியமானவை. ஜார்க்கண்டில் மட்டும் ஒரு கோடி பழங்குடிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருந்தாலும், 11 வனவிலங்கு காப்பகப் பகுதியிலிருந்து பழங்குடிகள் அகற்றப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு நல்லதல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தை முக்கியமாகப் பேசப்போகிறோம்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த சம்பவங்களால் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் முனை மழுங்கிவிட்டதாகக் கருதுகிறீர்களா?
நாட்டைக் காக்க ராணுவம் இருக்கும்போது நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு மோடி செல்ல வேண்டியதே இல்லை. கொள்கை வகுக்கும்போது மக்களின் நன்மையைக் கருதி செயல்பட்டிருக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். இவற்றுக்கு மோடியின் பதில் என்ன? சடலங்கள் வாக்குகளைக் கொண்டுவராது.
பாஜகவால் மத்தியிலோ மாநிலத்திலோ திறமையாக ஆட்சிசெய்ய முடியாது. புல்வாமாவில் தற்கொலைப்படை பயங்கரவாதித் தாக்குதலால் ராணுவ வீரர்கள் பலியாகினர். வயல்களில் விவசாயிகள் சாகிறார்கள், எல்லைப்புறங்களில் விவசாயிகளின் புதல்வர்கள் சாகிறார்கள். நாட்டில் 125 கோடி மக்கள் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று அவர்களுக்குப் புரியும். அவரவர் அவரவர் வேலையைச் செய்யட்டும். போர் மோடியின் வேலையல்ல. அமைதியான சூழலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது என்பதால் போரை விரும்புகிறது. கூட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்யும் நபர்கள்தான் ‘மோடி மோடி’ என்று கோஷமிடுகிறார்கள்; மக்களல்ல.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளால் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள முடியுமா?
தேசிய அளவில் என்னால் சொல்ல முடியாது. ஜார்க்கண்டைப் பொருத்தவரை இப்போது மக்களவைக்கும், சில மாதங்கள் கழித்து சட்டப்பேரவைக்கும் நடக்கும் தேர்தல்களில் சரியான போட்டியை அளிப்போம்.
உங்கள் கூட்டணிக்குப் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா?
இது காங்கிரஸின் பிரச்சினை. அவர்களே தீர்மானிக்கட்டும். நாங்கள் அவர்களுடைய எந்த முடிவையும் ஏற்போம். இப்போது பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறார். சூழ்நிலை எப்படி மாறும் என்று காலம்தான் சொல்ல முடியும்.
கோலிபிரா இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் எப்படி நடந்துகொண்டது? அதிகம் பேரம் பேசியதா, ஆணவம் தெரிந்ததா?
நீங்கள்தான் ஆணவம், பேரம் என்றெல்லாம் அடைமொழி தருகிறீர்கள். நாங்கள் இதையெல்லாம் சாதாரணமாகத்தான் கருதுகிறோம். பிரதமர் மோடியே ஜார்க்கண்ட் வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம்.
- ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி