

அமமுக கட்சியில் அதன் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் சினிமா நடன இயக்குநர் கலா இணைந்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கலா, ''மனசுக்கு ஒருவரைப் பிடிக்கவேண்டும். நான் ஆறு மாதமாக வேறொரு வேலையில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது தினகரனின் நேர்மையான பேச்சு, துணிச்சலான செயல்பாடுகள், எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் என்னைக் கவர்ந்தன.
கட்சியில் எனக்கு என்ன பணி கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து வேலை செய்வேன். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன பணி என்றாலும் யோசிக்காமல் பணியாற்றுவேன்'' என்றார் கலா.
கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சி மூலம் கலா தமிழகம் முழுக்கப் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.