

என் மகன் குமாரசாமி முதல்வராவதை விட, மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக்கவே விரும்பினேன். அதனால் என் கண்ணீரைக் கேலி செய்யாதீர்கள் என முன்னாள் பிரதமர் தேவகவுடா உருக்கமாகப் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மஜத தேசிய தலைவர் தேவகவுடாவின் மூத்த பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலும், இளைய பேரன் நிகில் குமாரசாமி மண்டியா தொகுதியிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ப்ரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேவகவுடா, ''இது தான் என் கடைசித் தேர்தல்'' என்று கண்ணீர் விட்டு அழுதார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, ''தேவகவுடா தேர்தல் வரும் போதெல்லாம் கண்ணீர் விட்டு மக்களை ஏமாற்றுகிறார். அவரது முதலைக் கண்ணீர் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். குடும்ப அரசியல் செய்யும் அவருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்''என விமர்சித்தார். இதனிடையே மஜதவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் தேவகவுடாவின் பேரன்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மண்டியாவில் பேரன் நிகிலை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேவகவுடா, ''நான் என் பேரனுக்காக கண்ணீர் வடிக்கவில்லை. ஹாசன் தொகுதிக்கும் எனக்கும் 60 ஆண்டு உறவு இருக்கிறது. இந்த முறை அங்கு போட்டியிட முடியாததை நினைத்து கண்ணீர் விட்டேன். அதனை எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளத்தில் கேலி செய்வது சரியல்ல. நான் குடும்ப அரசியல் செய்யவில்லை.
கடந்த 2018-ல் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு உருவான போது முதல்வர் பதவிக்கு என் மகன் குமாரசாமியின் பெயரை நான் முன்மொழியவில்லை. மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையே முதல்வராக்க விரும்பினேன்.
குமாரசாமியின் உடல் நிலையை எடுத்துக்கூறி, அவருக்கு முதல்வர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தான் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை வழங்கினர். அதனால் குடும்ப அரசியல் செய்வதாக கூறி, என் கண்ணீரைக் கேலி செய்யாதீர்கள்''என உருக்கமாகத் தெரிவித்தார்.