

‘அதிமுகவில் 18 வயது முதல் பணியாற்றுகிறேன். அமெரிக்காவில் இருந்து நேரடியாக வந்து சீட் கேட்கவில்லை’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று நேர்காணல் தொடங்கியது. இதில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, நேரடியாக மீனம்பாக்கத்தில் வந்திறங்கி, ‘என் அப்பா இந்த பதவியில் உள்ளார். அதனால் எனக்கு சீட் கொடுங்கள்’ என்று கேட்கவில்லை. 18 வயதில் இருந்து கட்சியில் உள்ளேன்.தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே இல்லை.
கட்சியில் படிப்படியாக முன்னேறி, தற்போது மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளேன். நான் வளர்ந்த பகுதி முன்னேற வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறேன்.
திறமை இருந்தால், யார் மகனாக இருந்தாலும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சி ஒருங்கிணைப்பாளரே கூறியுள்ளார். திறமையாகவும், கட்சிக்கு உண்மையான விசுவாசமாகவும் இருந்தால் யாருக்கும் இங்கு வாய்ப்பு கிடைக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.