

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்திய அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்திருந்தது. பிரதமர் பதவியிலிருந்து வி.பி.சிங் விலகிய நிலையில், சந்திரசேகர் பிரதமராக ஆதரவு தந்தது காங்கிரஸ். எனினும், இரு தரப்புக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் எழுந்தன. தன்னுடைய வீடு உளவு பார்க்கப்படுவதாக ராஜீவ் காந்தி குற்றம்சாட்டினார். ஒருகட்டத்தில், அரசுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொண்டது. பதவி விலகினார் சந்திரசேகர். இதனால், 1991-ல் மீண்டும் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது இந்தியா.
1991-ல் 10-வது மக்களவைத் தேர்தல் நடந்தது. முதல் கட்ட வாக்குப் பதிவு மே 20-ல், 211 தொகுதிகளில் முடிந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 12, 15-க்கு ஒத்திவைக்கப்பட்டன. ராஜீவ் மறைவால் அனுதாப அலை வீசினாலும், காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 244 தொகுதிகளில் அக்கட்சி வென்றது. பாஜக 120, ஜனதா தளம் 69, மார்க்சிஸ்ட் கட்சி 35, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 14, தெலுங்கு தேசம் 13 தொகுதிகளில் வென்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக 11 தொகுதிகளில் வென்றது. திமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.
இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ். நரசிம்மராவ் பிரதமரானார். நிர்வாகத் திறமை மிக்க நரசிம்மராவ், கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை வலு இல்லாமலேயே ஐந்தாண்டு காலத்தைப் பூர்த்தி செய்தார். நிலையான ஆட்சி தந்தார். பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துணிச்சலுடன் மேற்கொண்டார். சர்வதேசப் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கி, சுதந்திரமாகச் செயல்பட வைத்தார். அவரது அரசு தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது. தாராளமயம், உலகமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களையும் அன்னிய நிதி முதலீட்டாளர்களையும் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யவைத்த அரசு இது. ‘மந்திர் – மண்டல்’ அரசியல் நாட்டைப் பின்னோக்கி இழுத்துவிடாமல் காப்பாற்றியது நரசிம்மராவ் அரசின் சாதனை என்றாலும், பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அவரது ஆட்சியில் கறுப்புப் புள்ளியாக அமைந்தது.