

சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறது என திருமாவளவன் அறிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம் வகித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டது. அதையடுத்து நடந்த தொகுதி குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டன. முடிவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும் விழுப்புரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (17.3.19) செய்தியாளர்களைச் சந்தித்து, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் தொகுதியிலும் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
விழுப்புரம் தொகுதியில், ரவிக்குமார் போட்டியிடுகிறார். கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக உழைத்துவருகிறோம். எனவே, வெற்றியை மட்டுமே கருத்தில்கொண்டு சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம்.
வெற்றி எனும் இலக்கு நோக்கி இந்த முடிவு எடுத்திருக்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.