

இந்திய அரசியல் வரலாற்றில் சோஷலிஸ்ட் இயக்கத்தைப் பற்றி எழுதும்போது நினைவுக்கு வருபவர் ராம் மனோகர் லோகியா. நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார, சித்தாந்தப் பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகளைச் சிந்தித்த தலைவர் அவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இடையறாமல் போராடினார். மது லிமாயி, ரபி ராய், ராம் நரேஷ் யாதவ், கர்ப்பூரி தாக்கூர், நிதிஷ்குமார், லாலு பிரசாத், முலாயம் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று பல சோஷலிஸ்ட் தலைவர்களுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தார். ‘லோகியைட்டுகள்’ என்றே அவரது சீடர்கள் அழைக்கப்படலாயினர்.
உத்தர பிரதேசத்தின் அக்பர்பூரில் 1910 மார்ச் 23-ல் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தார் லோகியா. இரண்டு வயதானபோது தாயை இழந்தார். தந்தை ஹீரா லால் மறுமணம் செய்துகொள்ளாமல் மகனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். சிறந்த அறிவாளியான லோகியா, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூடாது என்ற உணர்வில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் பிரடெரிக் வில்லியம் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றார். காந்தியின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளின் பின்னணியில் ‘இந்தியாவில் உப்பு வரி’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
1936-ல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே செயல்பட்ட இடதுசாரி அமைப்பாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் நேருவுடன் பல விஷயங்களில் அவருக்குக் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. எனவே, 1948-ல் காங்கிரஸிலிருந்து லோகியாவும் அவரைப் போன்ற சோஷலிஸ்டுகள் பலரும் வெளியேறினர். 1952-ல் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். பிறகு, அவரே புதிய சோஷலிஸ்ட் கட்சியைத் தொடங்கி, அதன் தலைவரானார். அந்தக் கட்சி சார்பில் ‘மேன்கைன்ட்’ என்ற பத்திரிகையை நடத்தினார்.
மிகச் சிறந்த பேச்சாளர். ஏழைகள்பால் கருணையும் அக்கறையும் உள்ள எழுத்தாளர். ஆட்சியதிகாரத்தில் அமரும் வாய்ப்பு இல்லாவிட்டாலும்கூட மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்தார் லோகியா!