

அரக்கோணத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் முதல்வர் மேசை மீது ஏறி நடனம் ஏறிய ஸ்டாலின் எப்படி நாட்டைக் காப்பாற்றுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரக்கோணத்தில் பாமக வேட்பாளர் ஏ.கே,மூர்த்திக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இதுவொரு சந்தர்ப்பவாதக் கூட்டணி (திமுக கூட்டணி). சமயம் கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வார்கள். உதாரணத்துக்கு வைகோ. அவர் பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? எந்த அளவுக்குப் பேசினார்?
கட்சியில் (திமுக) இருந்தே பிரிந்துபோனவர் இப்போது அங்கே கூட்டணி சேர்ந்திருக்கிறார். அவர் சேர்ந்தது நல்லதுதான். அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ராசியாக இருக்கும். கூட்டணிக்கும் ராசியானவர்.
ஸ்டாலின் இந்த ஆட்சியையே கலைக்கப் பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பார்த்திருப்பீர்கள். என்ன ஆட்டம் ஆடினார் தெரியுமா? என்னுடைய மேசையின் மீது ஏறி ஆட்டம், பாட்டம். பெண் அமைச்சர் கூட மேசையில் ஏறி நடனம் ஆடினார். இவர்களா நாட்டைக் காப்பாற்றுபவர்கள்? என்றார் எடப்பாடி.