

மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். வாக்கு க்கு பணம் தருவதை தடுக்க வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களை களைய வேண்டும் என்ற நோக்கில் அரசியல் பார்வை கொண்ட பெண்கள் பலர் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, அகில இந்திய அளவில் ‘‘ தேசிய பெண்கள் கட்சி’’ என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சுவேதாஷெட்டி தலைமையில் புது டெல்லியில் கடந்த டிச.18-ம் தேதி இக் கட்சி தொடங்கப்பட்டது. மதுரையில் கடந்த வாரம் இக்கட்சியை அறிமுகப்படுத்தி, அதன் மாவட்டத் தலைவரும், சமூக ஆர்வலருமான ஜோதி பேசியதாவது: தேசிய பெண்கள் கட்சியில் நடிகைகள், பெண்ணிய வாதிகள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கட்சியின் நோக்கம் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவதுதான். இந்திய மக்கள் தொகை யில் 50 சதவீதம் பேர் பெண்கள். அரசியலில் மகளிருக்கான ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். 40 சதவீத பெண்கள் இன்னும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தடுப்பதில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தால் குற்றங்களை தடுக்கலாம். அதற்காகவே எனது முயற்சியில் மதுரையில் இக் கட்சியை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்தேன். பெண்கள் வாக்களிக்க பணம் வாங்க க்கூடாது. பணம் தராத பண்பாளரை தேர்வு செய்வது, பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை தொகுதி வாரியாக ஒதுக்குவது, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தலில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். பொருளாதாரப் பற்றாக்குறையால் அரசியல்வாதிகளிடம் பெண்கள் கை நீட்டுகின்றனர்.
பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால் இந்நிலையை மாற்றலாம். 3 வயது சிறுமி முதல் 90 வயது பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. தற்போதைய அரசியல் கட்சி பெண் பிரதிநிதிகள் இதுபற்றி எல்லாம் வாயைத் திறப்பதில்லை என்பதால்தான் தேசிய பெண்கள் கட்சி உதயமானது என்றார்.