

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள 3,54,187 புதிய வாக்காளர்கள் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.
விஐபி தொகுதிகளில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் டி.ராதாகிருஷ்ணன் (அதிமுக), எஸ்.ரத்தினவேல் (திமுக), வைகோ (மதிமுக), மாணிக்கம்தாகூர் (காங்கிரஸ்), கே.சாமுவேல்ராஜ் (மார்க்சிய கம்யூ.) உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 6,66,436 ஆண் வாக்காளர்களும், 6,79,714 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 88 பேரும் என மொத்தம் 13,46,238 வாக்காளர்கள் உள்ளனர்.
2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 9,92,051. அப்போது அதிகபட்சமாக 3,07,187 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பி.மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
அவரைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ 2,91,421 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பாண்டியராஜன் 1,25,229 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் காந்தி 17,336 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,198 வாக்குகளும் பெற்றனர்.
சுயேச்சைகளாகப் போட்டியிட்ட 10 வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 755 வாக்குகள் முதல் அதிகபட்சமாக 2,313 வாக்குகள் பெற்றனர். கடந்த தேர்தலில் 7,67,653 மொத்த வாக்குகள் பதிவாயின.
கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸுடன் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் பலம் இருந்தும் மாணிக்கம் தாகூர் பெற்ற மொத்த ஓட்டு 3,07,183. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. சில கட்சிகள், அமைப்புகள் ஆதரவோடு திமுக, மதிமுக போட்டியிடுகின்றன. இதனால் இத்தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இந் நிலையில், விருதுநகர் மக்களைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை இந்த முறை 13,46,238 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3,54,187 பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 68,146 பேர் முதன் முதலாக வாக்களிக்க உள்ளவர்கள்.
கடந்த முறை பதிவான கட்சி வாக்குகளுடன், புதிய வாக்காளர்களின் வாக்குகள் குறிப்பிட்ட சதவிகிதம் விழுந்தாலே வேட்பாளரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இதைக் கருத்தில் கொண்டு புதிய வாக்காளர்கள் மட்டுமின்றி அவர்களில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற பிரதான கட்சி வேட்பாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.
எனவே விருதுநகர் தொகுதியில் புதிய வாக்காளர்களே வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் நீதிபதிகளாக உள்ளனர்.