பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி?

பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி?
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராம்பூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகையான ஜெயப்பிரதா தமிழில் 'சலங்கை ஒலி', 'நினைத்தாலே இனிக்கும்', 'தசாவதாரம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

1994-ல் சக நடிகரான என்.டி.ராமாராவ் முன்னிலையில் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார். அதற்கு பலனாக 1996-ம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு உடனான கருத்து வேறுபாட்டால், தெலுங்கு தேசத்தை விட்டு வெளியேறிய ஜெயப்பிரதா சமாஜ்வாடியில் சேர்ந்தார். 2004 பொதுத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதேபோல 2009-ல் ராம்பூர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சமாஜ்வாடியில் இருந்தும் விலகிய அவர், அமர்சிங் என்பவருடன் இணைந்து 2010-ல் ராஷ்ட்ரிய லோக் மன்ச் என்னும் கட்சியைத் தொடங்கினார். 2014 தேர்தலில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடிகை ஜெயப்பிரதா பாஜகவில் இணைந்தார். அப்போது மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். பாஜக பொதுச் செயலர் பூபேந்திர யாதவ் மற்றும் மாநிலங்களவை எம்.பி. அனில் பலுனி ஆகியோரின் முயற்சியை அடுத்து  ஜெயப்பிரதா பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

இரு முறை போட்டியிட்டு வென்ற தொகுதியான ராம்பூரில் பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in