

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக தனது சகோதரி மகனைக் களமிறக்கினார் ரங்கசாமி.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த அசோக் ஆனந்தின் எம்எல்ஏ பதவி பறிபோனது. இதையடுத்து அவர் எம்எல்ஏவாக இருந்த தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை என்.ஆர்.காங்கிரஸ் அறிவிக்காமல் இருந்தது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்கூட்டியே தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் நேரடியாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய நெடுஞ்செழியனை அழைத்துக் கொண்டு ரங்கசாமி வந்தார். இவர் ரங்கசாமியின் சகோதரி தலிஞ்சம்மாளின் மகனாவார்.
மனுத்தாக்கலின் போது என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் இணைக்கக்கூடிய முக்கிய ஆவணங்கள் மற்றும் டெபாசிட் பணத்தினை எடுத்து வராமல் வேட்பு மனுத்தாக்கல் நடக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வந்தனர்.மேலும் வேட்பாளரை முன்மொழியும் நபரான ராமச்சந்திரன் என்பவர் மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தட்டாஞ்சாவடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் வேட்பாளர் நெடுஞ்செழியன் உடன் வந்தார். ஆனால், அசோக் ஆனந்தை அலுவலகத்தினுள் விடாததால் அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னரே அசோக் ஆனந்த் அனுமதிக்கப்பட்டார்.
முக்கிய ஆவணங்களைக் கட்சி நிர்வாகிகள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ரங்கசாமி நிர்வாகிகளைக் கோபத்துடன் கடிந்து கொண்டார். இறுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஸ்மித்தாவிடம் தனது வேட்பு மனுவை நெடுஞ்செழியன் தாக்கல் செய்தார்.