

திமுக, அதிமுகவில் வாரிசுகளுக்கு சீட் கொடுத்துள்ளார்களே என்கிற கேள்விக்கு திமுகவை மட்டும் குறிப்பிட்டு கமல் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்டப் பட்டியலில் 20 வேட்பாளர்களுக்கான பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் மழுப்பலான பதிலை அளித்தார்.
வாரிசு குறித்த கேள்விக்கு திமுகவை மட்டும் கிண்டலடித்தார். கோவை சரளா குறித்த கேள்விக்கு கோபப்பட்டார்.
செய்தியாளர்கள் கேள்வியும் கமலின் பதிலும்:
தேர்தல் அறிக்கை எப்போது?
தேர்தல் அறிக்கையும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்படும்.
நீங்கள் எங்கே போட்டியிடுகிறீர்கள்?
அதுவும் 24-ம் தேதி அறிவிக்கப்படும்.
பெண்ணுரிமை பற்றி பேசும் நீங்கள் ஒரே ஒரு பெண் வேட்பாளரை மட்டும் அறிவித்துள்ளீர்களே?
இது முதல் பட்டியல். அடுத்து வரும் பட்டியலில் தொடரும்.
அதிமுக திமுக தேர்தல் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள். அதில் உங்களை ஈர்த்தது என்ன?
சிறுவயதிலேயே என்னை ஈர்த்த வாக்குறுதிகள்தான். அதை நிறைவேற்ற வேண்டும். அதிலேயே நின்றால் எப்படி. அதை நிறைவேற்றும் செயலை மக்கள் நீதி மய்யம் செய்யும்.
நீங்கள் இன்னும் அரசியல் தலைவராக வரவில்லை. நடிகராகத்தான் இருக்கிறார் என குமாரவேல் தெரிவித்துள்ளாரே?
அவர் ஒரு தொழிலதிபர். அவரே இன்னும் அரசியல்வாதி ஆகவில்லை.
நேற்று வந்த கோவை சரளா என்னை நேர்காணல் செய்வதா? என குமரவேல் குற்றம் சாட்டியுள்ளாரே?
நீங்கள் என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நான் கேட்கக்கூடாது. உங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதால்தான் உங்களை நாங்கள் அழைத்துள்ளோம்.
அதுமாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. எல்லோருக்கும் இந்த சமுதாயத்தில் பொறுப்பும், ஒரு பதவியும், மரியாதையும் இருக்கிறது. அதுபோன்று கோவை சரளாவுக்கும் இருக்கிறது. ஒரு ஓட்டு போடும் பெண்மணி என்கிற விதத்தில்கூட கோவை சரளா வந்திருக்கலாம்.
அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு அதிக வாய்ப்பு என்று சொல்கிறார்களே?
ஆமாம் முன்பு அவர்கள் land of the rising sun (உதய சூரியனின் நாடு) என்று சொல்வார்கள். அதை தற்போது land of the rising son (மகனின்) என்று மாற்றிவிட்டார்கள். சூரியன் (sun) என்பதை மகன் (son) என்று மாற்றிவிட்டார்கள்.
இவ்வாறு கமல் பதிலளித்தார்.