விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் தொடங்கினார் கமல்ஹாசன்: கள ஆய்வு மூலம் வேட்பாளர்கள் தேர்வு

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் தொடங்கினார் கமல்ஹாசன்: கள ஆய்வு மூலம் வேட்பாளர்கள் தேர்வு
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம்  சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் கடந்த 7-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கட்சியினர் அல்லாதவர்கள் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று நேர்காணல் தொடங்கியது.

வேட்பாளர் தேர்வுக் குழு தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தலைமையில், கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் அருணாசலம், கார்ட்டூனிஸ்ட் மதன், நடிகை கோவை சரளா மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தினர்.

முதல் நாளான நேற்று திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், புதுச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், அரக்கோணம், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 12 தொகுதிகளுக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

‘கட்சி தொடங்கி கடந்த ஓராண்டில் தங்களது பகுதிகளில் கட்சிக்காக மேற்கொண்ட பணிகள் என்ன,தொகுதியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்துக்கு வரவேற்பு எந்த அளவுக்கு உள்ளது, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?’ என்பது போல பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. நேர்காணலில் பங்கேற்ற அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் வழங்கப்பட்டது.

தொகுதி வாரியாக, வரும் 15-ம் தேதி வரை நேர்காணல் நடக்க உள்ளது. நேர்காணலில் ஒரு தொகுதிக்கு 3 பேர் வரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுடன் அவர்களுடைய தொகுதியில் கள ஆய்வு செய்து, மக்கள் மத்தியில் வேட்பாளராகத்  தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு இருக்கும் நற்பெயர், மக்கள் பிரச்சினைகளில் பங்கேற்று தீர்வு கண்டுள்ளாரா, நன்னடத்தை உள்ளிட்டவை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட உள்ளது.

இக்குழுவின் பரிந்துரையின் பேரில் வேட்பாளரைத்  தேர்வு செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் மேலும் கூறியபோது, ‘‘கல்வி, வயது, நன்னடத்தை உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கள ஆய்வின் மூலம், தொகுதி மக்களிடம் வேட்பாளராகத்  தேர்வு செய்யப்பட உள்ளவருக்கான அறிமுகம், நற்பெயர் உள்ளிட்டவற்றைக்  கண்டறிய முடியும்.  எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், சிறந்த மனிதராக மக்கள் மத்தியில் வலம் வருபவரையே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். நேர்காணல் முடிந்து ஒரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in