

தேர்தல் நடத்தும் முறையை முன்பைவிட எளிதாக்கிய சாதனம் - மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (ஈவிஎம்). 1982-ல் கேரள சட்டமன்றத் தேர்தலின்போது, பறவூர் தொகுதியில்தான் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக
ஏ.சி.ஜோஸ் நின்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிவன் பிள்ளை போட்டியிட்டார். வாக்குப் பெட்டியில் வாக்களிக்கும் முறைக்கு மாற்றாகப் பரிசோதனை முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டபோது இரு தரப்புமே அதை முதலில் வரவேற்கவில்லை.
வாக்குப் பதிவு இயந்திரத்தை அந்தத் தொகுதியின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்று செய்முறை விளக்கம் கொடுத்தனர் தேர்தல் அதிகாரிகள். தொகுதியின் 123 வாக்குச் சாவடிகளில்
50 சாவடிகளில் மட்டுமே இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், ஏ.சி.ஜோஸ் தரப்பு அந்த வெற்றியை கேள்விக்குட்படுத்தியது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததும், உச்ச நீதிமன்றம் சென்றார் ஜோஸ். இதையடுத்து, அந்த 50 சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முறை வாக்குச்சீட்டுகளே பயன்படுத்தப்பட்டன. ஜோஸ் வென்றார். இந்த இயந்திரங்கள் குறித்து இன்றுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பிவருகின்றன. பறவூர் தொகுதியில் நடந்த அந்தத் தேர்தலே இதற்கும் தொடக்கப்புள்ளி வைத்தது!