

பிரதமர் மோடியை விமர்சிக்கும்போதெல்லாம் எனக்கு சம்மன் வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:
‘நான் இறங்கி வந்து பேச மாட்டேன். மக்களோடு, மக்களாகப் பழக மாட்டேன்’ என்று தவறாகக் கூறி வருகின்றனர். சூடாக கொடுத்தால், எந்த ஊரிலும் டீ குடிப்பேன். அசைவம் நன்றாக சாப்பிடுவேன்.
நான் என்னமோ புதுசா அரசியலுக்கு வந்த மாதிரி பேசுகின்றனர். சிறு வயதிலேயே தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். வாக்குச்சாவடி முகவராக இருந்துள்ளேன். போலீஸுடன் சண்டை போட்டிருக்கிறேன்.
‘உங்களை டெல்லிக்கு அனுப்புகிறோம்.. டெல்லிக்கு அனுப்புகிறோம்..’ என்று சொல்லாதீர்கள். வழக்குக்காக பலமுறை டெல்லிக்கு சென்று வந்துவிட்டேன். ‘எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்புவோம்’ என்று சொல்லுங்கள்.
எனது தந்தை எப்போதெல்லாம் மோடியை விமர்சிக்கிறாரோ, அப்போதெல்லாம் எனக்கு சம்மன் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.