

அமமுக சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அமமுக சார்பில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இரண்டு கட்டங்களாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்.ஞான அருள்மணிக்குப் பதிலாக, மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ராயப்பன், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.
திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் பி.எச்.மனோஜ் பாண்டியனும், திமுக சார்பில், ஞான திரவியம் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, அமமுக சார்பில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு என்.தமிழ்மாறன் என்பவர் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், புதுச்சேரி கழக இளைஞரணி செயலாளராக உள்ளார்.
மேலும், ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கர்நாடக மாநில கழக செயலாளராகவும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார்.