

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வீசிய ‘மோடி அலை’ பாஜகவுக்கு எம்பி.க்களை அள்ளிக் கொடுத்தது. ஆனால், இந்த முறை அதுபோன்ற அலை எதுவும் இல்லை. எனவே, தேர்தலில் வெற்றி பெற நல்ல வேட்பாளர் முக்கியம் என்பதால் பாஜகவின் இப்போதைய எம்பி.க் களில் செயல்படாத எம்பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க கட்சித் தலைமை மறுத்து வருகிறது.
இதுவரை, பாஜகவால் அறிவிக் கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலி லும் அதன் பல எம்பி.க்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்மூலம், கட்சியில் கிளம்பும் அதிருப்தியாளர்கள் பாஜகவை வீழ்த்தி விடாமல் இருக்க அக்கட்சி புதிய உத்தியை கையாளுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘அதிருப்தியாளர்களால் கட்சிகள் ஆட்சி செய்யும் வாய்ப்பை இழந்த வரலாறு உண்டு. இந்த நிலையில் பாஜகவும் சிக்கிவிடாமல் இருக்க அவர்களுக்கு ஆட்சிக்கு வந்தபின் ஏதாவது ஒரு பதவி அளிப்பதாக ரகசிய உறுதி அளிக் கப்பட்டுள்ளது. இதனால், இந்த முறை வாய்ப்பளிக்கப்படாத எம்.பிக்கள், புதிய வேட்பாளர்களின் வெற்றிக்கு காரணமாக இருப் பார்கள் என நம்புகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.
பாஜக எம்பி.க்களின் செயல்பாடு களின் அடிப்படையில் தேர்தலில் மறுவாய்ப்பு வழங்கப்படவில்லை. அசாமில் ஏழு எம்பி.க்களில் 5 பேருக்கு பாஜக வாய்ப்பளிக்க வில்லை.
உ.பி.யில் இதுவரை அறிவிக் கப்பட்ட 64 வேட்பாளர்களில் 17 எம்பி.க்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எண் ணிக்கை உ.பி.யில் மேலும் அதிகரிக் கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஐந்து எம்பி.க்களின் எண்ணிக்கை ம.பி.யில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ் தானில் மட்டும் ஒரே பெண் எம்பி.க் கும், மகாராஷ்டிராவில் 4 எம்பி.க் களுக்கும் மறுவாய்ப்பு கிடைக்க வில்லை. இந்தநிலை, டெல்லி யிலும் ஏற்படும் எனத் தெரிகிறது.
மறுவாய்ப்பு கிடைக்காதவர்கள் பட்டியலில் மூத்த தலைவர்களும் உள்ளனர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், கல்ராஜ் மிஸ்ரா, சாந்தகுமார் ஆகியோருக்கு 75 வயதுக்கும் அதிகம் என்பதால் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.