

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் பறக்கும் படை வேடிக்கை பார்ப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலில் 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் சார்பில் வேட்பாளர் உம்மிணி தேவி போட்டியிடுகிறார். அவரையும் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தல் வேட்பாளரையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ''இதற்குப் பேர் என்ன வைத்திருக்கிறார்கள் தெரியுமா? தேர்தல் கமிஷன். ஏன்? கமிஷன்.. அதிலேயே புரிந்துகொள்ளலாம். தேர்தல் ஆணையத்தை நான் சொல்லவில்லை. அதுவொரு நாடக கம்பெனி.
பறக்கும் படை என்ன செய்கிறது என்றால் கத்தரிக்காய் விற்றுச் செல்பவர், மளிகைக்கடைக்கு சரக்கு வாங்க பணம் கொண்டு செல்பவர், அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டப் போனவர், அவ்வளவுபேரின் பணத்தையும் பிடித்துக்கொள்ளும்.
ஆனால் ஓட்டுக்குக் காசு கொடுப்பவரை ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இதுவொரு கேடுகெட்ட தேர்தல் ஆணையம்'' என்று ஆவேசமாகப் பேசினார் சீமான்.