சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா: விழுப்புரத்தில் ராமதாஸ் புகழாரம்

சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா: விழுப்புரத்தில் ராமதாஸ் புகழாரம்
Updated on
1 min read

விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகப்படுத்தும் அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேமுதிக மாநில துணை செயலாளரான கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது: அதிமுக என்று சொன்னால் சத்துணவு, தொட்டில் குழந்தை திட்டங்கள் நினைவு வரும், சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. 69 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டரீதியாக 9 வது அட்டவணையில் சேர்த்த பெருமை அவரையேச் சாரும். பாமக என்றால் 108 ஆம்புலன்ஸ், அகல ரயில் பாதை, இட ஒதுக்கீடு போராட்டம் உள்ளிட்டவைகள் நினைவுக்கு வரும். பாஜக என்றால் கார்கில் போர், புல்வாமா, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நினைவுக்கு வரும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் பொங்கலை கொண்டாட அனைவருக்கும் ரூ.1,000 வழங்கியது அதிமுக. தற்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1,500 கொடுப்பது, காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் போன்றவைகளை தற்போது தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளது. தேர்தல் வியூகம் அமைப்பதில் பாமகவை காட்டிலும் அதிமுக முன்னணியில் உள்ளது. 'உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும். அப்போதும் இக்கூட்டணி தொடரும்' என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். எனவே நாம் வேகமாக செயல்பட வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in