பெரோஸ் காந்தி: உள்ளிருந்து எழுந்த விமர்சனக் குரல்

பெரோஸ் காந்தி: உள்ளிருந்து எழுந்த
விமர்சனக் குரல்
Updated on
1 min read

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது நடந்த கல்லூரி மாணவர்கள் போராட்டம் அது. அலகாபாத் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக காங்கிரஸின் ‘வானர சேனை’ அமைப்பு  அந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. நண்பகல் நேரம். அப்போது நடுவயதுப் பெண் ஒருவர் வெயில் தாளாமல் மயக்கமடைந்தார். சிறுமியான அவருடைய மகள் செய்வது அறியாமல் திகைத்தபோது, ஒரு மாணவர் உடனடியாக உதவிக்கு வந்தார். குடிநீருக்கும், மருந்துக்கும் ஏற்பாடு செய்த அந்த இளைஞர், அவர்கள் இருவரையும் வீட்டில் கொண்டுபோய் விட்டார். அவர்கள் - கமலா நேருவும் இந்திரா காந்தியும். அந்த இளைஞர் – பெரோஸ் காந்தி.

1942-ல் பெரோஸும் இந்திராவும் திருமணம் செய்துகொண்டனர். இந்திராவின் கணவர் எனும் அடையாளத்தைத் தாண்டி, அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து உள்ளுக்குள்ளே இருந்து எழுந்த விமர்சனக் குரலாகவே அறியப்படுபவர் பெரோஸ் காந்தி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரான அவர், பலமுறை கைதாகி சிறை சென்றவர். சோஷலிசக் கருத்துகளை ஆதரித்தார். 1952, 1957 பொதுத் தேர்தல்களில் ராய்பரேலியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். 1955-ல் தொழிலதிபர் ராம் கிஷன் டால்மியா, தான் தலைவராக இருந்த காப்பீட்டு நிறுவனம், வங்கி ஆகியவற்றின் நிதியைச் சொந்தத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியதை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியது பெரோஸ்தான். 1958-ல் தொழிலதிபர் முந்த்ரா-எல்ஐசி தொடர்புள்ள நிதி முறைகேட்டையும் அம்பலப்படுத்தினார்.

நாடாளுமன்ற உரிமை மீறல் சட்டம் பற்றிய அச்சமின்றி நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பத்திரிகையாளர்கள் வெளியிட, தனி நபர் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றினார் பெரோஸ் காந்தி. பத்திரிகைச் சுதந்திரத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். அரசைத் தொடர்ந்து விமர்சித்ததால் நேருவின் அதிருப்தியை எதிர்கொள்ள நேர்ந்தது. இந்திராவுடனும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. உடல் நலனில் அக்கறை காட்டாததால் இதய நோய்க்கு ஆளானார். 1960-ல் தனது 47-வது வயதில் மறைந்தார் பெரோஸ். நேரு தலைமையில் காங்கிரஸில் நிலவிய முழு ஜனநாயகத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in