

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய குடிமக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய குடிமக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் கே.எம்.கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க, அகில இந்திய குடிமக்கள் உரிமை பாதுகாப்பு கழக பொதுக்குழு முடிவு செய்துள்ளது.
கடந்த 2014-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவரை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தனர். ஆனால், வாக்களித்த மக்களை மோடி தலைமையிலான அரசு வஞ்சித்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் பாஜக அரசு தோற்றுப்போய் விட்டது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது. ஜிஎஸ்டியால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாங்கும் சக்தி பெருமளவு குறைந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது.
பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பணம் ஒழியவில்லை. சொந்த நாட்டு மக்களை வேதனையில் தத்தளிக்கவிட்டு மோடி நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்து வந்தார். ரூ.3000 கோடி செலவிட்டு வல்லபாய் படேலுக்கு சிலை வைத்த மோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 கோடியை கிள்ளித் தருகிறார். நீட் தேர்வில் தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம் என்று தொடர்ச்சியாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
இந்துத்துவா அரசியலை முன்வைத்து ஒரு பாசிச ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விவசாயிகள் பிரச்சினை, ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு போன்ற எந்த வாக்குறுதிகளும் மோடியால் நிறைவேற்றப்படவில்லை. ஒட்டுமொத்த தேசமும் பதட்டத்திலும் பரபரப்பிலும் உள்ளது.
நலிந்த பிரிவினரின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள்- தொழிலாளர்கள்- மத்திய மாநில அரசு ஊழியர்கள்- பொதுப்பிரிவினர் என்று அனைத்துப் பிரிவு மக்களும் மோடி அரசால் வீழ்த்தப்பட்டுவிட்டனர்.
தேசத்தின் நலன் கருதி, நாட்டு மக்களின் நல்வாழ்வை கணக்கில் கொண்டு மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க அகில இந்திய குடிமக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவையின் ஒரு தொகுதியிலும், தமிழகத்தின் 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்களின் அவலநிலை நீங்க இத்தகைய முடிவினை எடுத்துள்ளோம். நாட்டின் நலிவு நீங்கிட, ஏழைகள் ஏற்றம் பெற்றிட, திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்''.
இவ்வாறு அகில இந்திய குடிமக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது.