

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னையில் கடந்த 3 நாட்களாக வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்த நிலையில், நேற்று விறுவிறுப்படைந்தது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வட சென்னை
வட சென்னை மக்களவைத் தொகுதி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட தேமுதிக வேட்பாளர் அழகா புரம் ஆர்.மோகன்ராஜ் நேற்று பேசின் பாலச் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலு வலர் எஸ்.திவ்யதர்ஷினி வேட்புமனுவை பெற்றுக்கொண்டார். அப்போது வேட்பா ளருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், அதிமுக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ், தேமுதிக வடசென்னை மாவட்ட செயலர் மதி வாணன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட, பி.காளியம்மாள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேமுதிக வேட்பாளர் பிற்பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. அதனால் அமைச்சர் டி.ஜெயக் குமார் சரியான நேரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ஆனால் வேட்பாளர் 1.40 மணி அளவிலேயே வந்தார். அதன் பின்னரே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய சென்னை
இத்தொகுதியில் கடந்த 3 நாட்களும் எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் 4-வது நாளான நேற்று பாமக வேட்பாளர் சாம் பால் வேட்புமனு தாக்கல் செய்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.என்.ஸ்ரீதர் வேட்புமனுக்களைப் பெற்றுக்கொண்டார். வேட்பாளருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஜே.பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் மூ.ஜெயராமன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, முன்னாள் எம்பி ந.பாலகங்கா, தியாகராயநகர் எம்எல்ஏ சத்யா உள் ளிட்டோரும் வந்திருந்தனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பார்த்தசாரதி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தென் சென்னை
தென்சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், அடையாரில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆல்பி ஜான் வர்க்கீஸிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது எம்எல்ஏக்கள் ஆர்.நட்ராஜ், விருகை வி.என்.ரவி முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பூர்
பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆர்.டி.சேகர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் வட சென்னை வடக்கு மாவட்ட செயலர் சுதர்சனம், முன்னாள் எமஎல்ஏ எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். மேலும் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மெர்லின் சுகந்தி, அவருக்கு மாற்று வேட்பாளராக கீதா, சுயேச்சை வேட்பாளர்கள் கே.எஸ்.கணேசன், எஸ்.ஜெயராஜ் ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.