

வழக்கமாக தாமதமாக வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியையே அவரது வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி வேட்பு மனுதாக்கலின் போது காக்க வைத்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி எப்போதுமே தாமதமாகத்தான் நிகழ்வுகளில் பங்கேற்பது வழக்கம். இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவித்துவிட்டு மதியமே வேட்பு மனுதாக்கல் என்று குறிப்பிட்டார்.
பின்னர் நண்பகல் 12 மணிக்கு ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் அவரது வீட்டருகே உள்ள கதிர்காமம் கதிர்வேல் முருகன் கோயிலுக்குச் சென்றனர். ஆனால் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி வரவில்லை. அவரை உடனே அழையுங்கள் என்று ரங்கசாமி தெரிவிக்க அங்கிருந்த நிர்வாகிகள் அவசர அவசரமாக செல்போனில் டாக்டர் நாராயணசாமியை அழைக்கத் தொடங்கினர். ஆனால், செல்போன் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது.
"வேட்பு மனுதாக்கல் செய்ய வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்தேன். அங்கும் வரவில்லை. இங்கும் சரியான நேரத்துக்கு வரவில்லை" என்று அங்கிருந்தோரிடம் ரங்கசாமி குறிப்பிட்டார்.
சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு காரில் வேட்பாளர் நாராயணசாமி வந்தார். கோயிலுக்குள் சென்ற பிறகுதான் வேட்பு மனுதாக்கல். ஆவணங்கள் காரில் இருந்தன. அதனால் மீண்டும் காருக்கு வந்து ஆவணங்களை அவருடன் வந்தோர் எடுத்து வந்தனர். அதையடுத்து காரில் அங்கிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கமாக ரங்கசாமிதான் அனைவரையும் காக்க வைப்பார்- அவரையே அவரது வேட்பாளர் காக்க வைத்துவிட்டார் என்பதை ஆச்சரியத்துடன் பேசத் தொடங்கியுள்ளனர்.