

சேலம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதி முறை மீறி துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வருகைக்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக கூட்டணி கட்சிக் கொடிகளை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். அதேபோல, கள்ளக்குறிச்சி மக்களவை வேட்பாளர் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் சேலம் மக்களவை தொகுதி, நாமக்கல், தருமபுரி மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிகள் உள்ளடக்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள் உள்டங்கியுள்ளது. இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி நேற்று காலை 8 மணி முதல் வீராணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணியின் வாகனத்தை ஏற்காடு தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் சோதனையிட்டனர். தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையிட வசதியாக வேட்பாளர் கவுதம் சிகாமணி மற்றும் உடன் இருந்த கட்சியினர் வாகனத்தை விட்டு கீழே இறங்கினர். தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர் வாகனம் மற்றும் உடன் வந்த மற்றொரு வாகனத்தில் பணமோ, வேறு பரிசுப் பொருட்களோ உள்ளதா என ஆய்வு செய்தனர். வாகனத்தில் எதுவுமில்லாததை அடுத்து, பறக்கும் படையினர் சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சேலம் தாதகாப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ் சரவணனை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். இதற்காக அவர் நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு சேலம் வருவதாக இருந்தது. துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக, சேலம் வின்சென்ட்டில் இருந்து அஸ்தம்பட்டி வரையிலான சாலைகளின் இரு புறங்களிலும் அதிமுக கொடி மற்றும் கூட்டணி கட்சிக் கொடி கம்பங்களை நட்டு வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்டிஓ-வுமான செழியன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வின்சென்ட் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். தேர்தல் விதி முறை மீறி சாலைகளில் நடப்பட்டு இருந்த அதிமுக மற்றும் அவ்ரகளது கூட்டணி கட்சிக் கொடிகளை அப்புறப்படுத்தினர்.
சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதி முறை மீறப்படுகிறதா என தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.