

மாநில முதல்வர்கள் செயல்பாடு குறித்து வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி இடமும் , தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு முதலிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மாநில முதல்வர்கள் குறித்து ஒவ்வொரு மாநில மக்களிடம் 'சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ்' செய்தி நிறுவனம் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் செயல்பாட்டில் தெலங்கானா முதல்வர் கே.டி.சந்திரசேகர் ராவ் செயல்பாடு சிறப்பாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்து அவருக்கு முதலிடம் அளித்துள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 68.3 சதவீதம் பேர் சந்திரசேகர் ராவ் நிர்வாகம், செயல்பாடு மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். சந்திரசேகர் ராவின் செயல்பாட்டில் ஒட்டுமொத்த நிகர மனநிறைவு வீதம் 79.2 சதவீதமாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 2-வது இடத்திலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்று வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி 5-வது இடத்திலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 6-வது இடத்திலும் உள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் நாராயனசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் ஆகியோரின் செயல்பாட்டில் மனநிறைவு இல்லை என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகக்குறைந்த அளவு மனநிறைவு அளிக்கும் வகையில் செயல்பட்ட முதல்வர் வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி இடத்தை வாக்காளர்கள் வழங்கியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 42 சதவீதம் பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக செயல்படுவது அந்த கட்சிக்கு சிறப்பானதாக இருக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து 52 ஆயிரத்து 712 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதில், 22 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆளுகின்ற மாநிலங்களின் முதல்வர்கள் இருவர் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் வருகின்றனர். 2-வது இடத்தில் உள்ள இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், 10-வது இடத்தில் உள்ள அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் ஆகியோர் செயல்பாடு, நிர்வாகம் மனநிறைவு தரும் வகையில் இருப்பதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். 11-வது இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார்.