

அரசியலை சாக்கடை என்று ஒதுக்கி விடாதீர்கள் என விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் தீவிரமான பிரச்சாரக் களத்தில் இருக்கிறார்கள். ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், 'சூப்பர் டீலக்ஸ்' படம் தொடர்பான பேட்டியில், தேர்தலில் அனைவரும் ஓட்டு போடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
விரைவில் தேர்தல் வரவுள்ளது. அரசியலை சாக்கடை என்று ஒதுக்கி விடாதீர்கள். சமூக வலைதளங்களில் திட்டிவிட்டு ஒதுங்கிப் போய்விடாதீர்கள். நம் வீட்டில் சாக்கடை அடைத்தால், நாம்தானே சுத்தம் செய்கிறோம். ஆகவே, தேர்தலைப் புறக்கணிக்காதீர்கள். சேவை செய்பவர்கள் யார் என்றும், பதவிக்கு அலைபவர்கள் யார் என்பதையும் புரிந்து கொண்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம், மார்ச் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.