

பாஜகவை வீழ்த்தும் நோக்கில், மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்காக இடங்களை விட்டுக்கொடுத்து, வலுவான கூட்டணியை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் கூட்டணிக் கட்சிகளுக்காக அதிகமான இடங்களை மாநிலங்களில் விட்டுக்கொடுத்து தேர்தலைச் சந்திப்பது இது முதல் முறையாகும்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், தமிழகத்தில் திமுக கூட்டணி, பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் என பல்வேறு மாநிலங்களில் கூட்டணியை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது.
மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கூட்டணியை எதிர்பார்த்த நிலையில், மாயாவதியும், அகிலேஷும் கூட்டணி அமைத்ததால், காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் நல்லவிதமாக பேச்சு சென்ற நிலையில், திடீரென ஏற்பட்ட குழப்பத்தால் பேச்சு தடைபட்டது. இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட உள்ளனர்.
ஆனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டாலும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அசாம் மாநிலத்தில் ஏஐயுடிஎப் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த மாநிலங்கள் தவிர பெருவாரியான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் புள்ளியல் ஆய்வுதுறையின் தலைவர் பிரவீண் சக்தரவர்த்தி கூறியதாவது:
"இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்து, தேர்தலைச் சந்திக்கிறது. எங்கள் நோக்கம் மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே 2019-ம் ஆண்டு தேர்தல்தான் கூட்டணிக்கு உகந்த தேர்தலாக இருக்கக்கூடும். கூட்டணி அறிவித்தபின், கூட்டணிக் கட்சிகள் மனவருத்தம் அடையாத வகையில் அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்தது இந்த யுக்தியால்தான். கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பின் மக்களவைத் தேர்தலில் மிகக் குறைந்த அளவு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுவது இதுதான் முதல் முறையாகும். 2004-ல் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய யுக்தி இப்போது பயன்படுத்தப்படுவது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 1996-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 529 இடங்களிலும், 1998-ல் 467 இடங்களிலும், 2009-ம் ஆண்டில் 440 இடங்களிலும், 2014-ம் ஆண்டில் 464 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை 218 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பிஹாரில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், மகாராஷ்டிவாவில் உள்ள 48 தொகுதிகளில் 26 இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் 28 இடங்களில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் 14 இடங்களில் 7 தொகுதிகளிலும், தமிழகத்தில் 39 இடங்களில் 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
ஜம்மு காஷ்மீரில் 4 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகமான இடங்களை அளித்து தோழமையுடன் கூட்டணியை அழைத்துச் செல்ல விரும்புகிறது''.
இவ்வாறு பிரவீண் சக்தரவர்த்தி தெரிவித்தார்.
இதில் மகாராஷ்டிரா, பிஹார் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இறுதி செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், கிழக்கு மண்டலத்துக்கு பொறுப்பு ஏற்றுள்ள பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாரணாசி முதல் பிரயாக்ராஜ் வரை மேற்கொள்ளும் பயணம் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.