

ஜெயலலிதா பாணியில் இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்களா, வெற்றி பெறச் செய்வீர்களா என்று தொண்டர்களிடம் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக பாஜகவுடனும் திமுக காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எஸ்எம் ஆனந்தன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ''திருப்பூரில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் பாமக ஆகியவை மெகா கூட்டணி அமைத்துள்ளன. பிரதமர் வேட்பாளர்கள் மோடி மற்றும் ராகுல் காந்தி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
2011-ம் ஆண்டு வரலாற்றை நீங்கள் (மக்கள்) திரும்பக் கொண்டு வருவீர்களா? இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்களா?
உறுதியாக வெற்றிபெற்று நமது திருப்பூர் தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மைத் தொகுதியாக மாற்றியே தீருவோம் என்று நாம் அனைவரும் சூளுரை ஏற்போம். இந்தக் கூட்டணி என்றைக்கும் தொடரும் கூட்டணி'' என்றார் பிரேமலதா.