77: குளிர்பானத்தில் சுதேசி அரசியல்

77: குளிர்பானத்தில் சுதேசி அரசியல்
Updated on
1 min read

ஜனதா கட்சி 1977-ல் பெற்ற வெற்றியை இரண்டாவது சுதந்திரம் என்றெல்லாம் கொண்டாடித் தீர்த்தார்கள். 77 எனும் எண்ணை இறுக அணைத்துக்கொண்டது ஜனதா கட்சி. அக்கட்சியில் சோஷலிஸ்டுகள் செல்வாக்கு பெற்றிருந்ததால் இந்தியாவிலிருந்து கோககோலா நிறுவனத்தை விரட்ட முயற்சி நடந்தது.

கோககோலா இந்திய நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை இந்திய முதலீட்டாளர்களிடம் அளிக்க வேண்டும் என்று மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. கோககோலா தயாரிப்பு ரகசியத்தை இந்தியா தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்பட்டது. இந்தியச் சந்தையே வேண்டாம் என்று அமெரிக்காவின் கோககோலா பன்னாட்டு நிறுவனம் நடையைக் கட்டியது. அதற்குப் பதிலாக மைசூரில் இருந்த இந்திய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் புதிய மென்பானம் தயாரிக்கப்பட்டது.

அதற்கு ஏற்ற பெயரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மக்களுக்குத் தரப்பட்டது. இறுதியில், ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் அதற்கு ‘77’ (டபுள் செவன்) என்ற பெயரைச் சூட்டி பரிசைத் தட்டிச்சென்றார். புதிய பானம் மக்களைக் கவரவில்லை. இந்தியச் சந்தையில் விலைபோகவில்லை. ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் சில மாதங்கள் கடனே என்று குடித்தார்கள். கேம்பகோலா, தம்ஸ்அப், டியூக்ஸ், மெக்டவல்ஸ் கிரஷ், டபுள் கோலா போன்ற இந்திய மென்பானங்கள் அதைவிட நன்றாக விற்றன. 1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். ‘டபுள் செவன்’ என்ற பெயரே ஆட்சியாளர்களுக்கு எரிச்சலூட்டியது. 77 தயாரிப்பது நின்றுபோனது. ‘தம்ஸ்அப்’ இன்றளவும் தாக்குப் பிடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in