

‘அயிலியாத் குட்டியாரி கோபாலன்’ என்றால் கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட சற்று யோசிப்பார்கள். ‘காம்ரேட் ஏகேஜி’ என்றால் பரவசம் பொங்க, அவரா என்று நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வார்கள். புதிதாகச் சுதந்திரம் அடைந்த மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் 16 கம்யூனிஸ்ட் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கியவர் ஏ.கே.கோபாலன்.
வடக்கு கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் பேரளசேரி என்ற ஊரில் 1904 அக்டோபர் 1-ல் பிறந்தார். தெள்ளிச் சேரியில் படித்தார். பிறகு, ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மகாத்மா காந்தியின் வரவால் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த சமயம், காந்திஜியின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் நடத்திய கிலாஃபத் இயக்கத்தில் ஈடுபட்டார். பிறகு ஆசிரியப் பணியை விட்டுவிட்டு முழுநேர சமூகப் பணியாளராகவும் அரசியல் சேவகராகவும் மாறிவிட்டார்.முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில்தான் சேர்ந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டதற்காக
1930-ல் கைதுசெய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சமதர்மவாதிகளின் சகவாசத்தால் சோஷலிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதனாலேயே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். 1939-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
இரண்டாவது உலகப் போரின்போது, அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததால் கைதுசெய்யப்பட்டவர்களில் கோபாலனும் ஒருவர். 1942-ல் சிறையிலிருந்து தப்பிய அவர் 1945 வரையில் தலைமறைவாக இருந்தார். போர் முடிந்த பிறகு கைதுசெய்யப்பட்ட அவர், நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15-ல் சிறைக்கூடத்தில்தான் இருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது ஏகேஜி புதிய கட்சியில் சேர்ந்தார். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி என்று புதிய கட்சி அழைக்கப்படலாயிற்று. ஏகேஜி மலையாளத்தில் எழுதிய புத்தகங்கள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவருடைய பட்டினிச் சமரம் என்ற நெடும் பயணம் இந்திய உழைக்கும் வர்க்கப் போராட்டங்களில் முக்கியமானது. தமிழ்நாட்டில் திருச்சியில் தங்கி கட்சித் தோழர்களுக்கு வகுப்பு எடுத்ததுடன் தொழிற்சங்கக் கட்டமைப்பை வலுப்படுத்தினார்.