எனது தொலைபேசியை குமாரசாமி ஒட்டுகேட்கிறார்: நடிகை சுமலதா குற்றச்சாட்டு

எனது தொலைபேசியை குமாரசாமி ஒட்டுகேட்கிறார்: நடிகை சுமலதா குற்றச்சாட்டு
Updated on
1 min read

மண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்து போட்டியிடுவதால் எனது தொலைபேசியை முதல்வர் ஒட்டு கேட்கிறார் என நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மண்டியா தொகுதியில் முன்னாள் அமைச்சர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் – மஜத கூட்டணி சார்பில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் சுமலதா நேற்று மண்டியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவின்  ஆதரவால் எனக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள எதிர்தரப்பினர் எனக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். எனக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் தர்ஷன் வீட்டின் மீது நிகில் ஆதரவாளர்கள் கல்லெறிந்ததை ஏற்க முடியாது. இதேபோல நடிகர் யஷ்ஷை சிலர் தொலைபேசியில்  மிரட்டியுள்ளனர். இத்தகைய மிரட்டலின் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது.

நான் யாரை சந்திக்கிறேன். என்ன வியூகம் வகுக்கிறேன் என்பதை உளவுத்துறை மூலம் கர்நாடக அரசு கண்காணிக்கிறது. இதற்காகவே 4 போலீஸார் என்னை பின் தொடர்கிறார்கள். எனது தொலைபேசியையும் அதிகாரிகள் ஒட்டுகேட்கிறார்கள். குமாரசாமியின் மகனுக்கு எதிராக போட்டியிடுவதாலேயே இதெல்லாம் நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போகிறேன்.

இவ்வாறு சுமலதா கூறினார்.

இதனிடையே கொலை மிரட்டல் காரணமாக சுமலதா, தர்ஷன், யஷ் ஆகியோருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில பாஜக பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

சுமலதா பெயரில் 3 சுயேச்சைகள்

மண்டியாவில் சுயேச்சையாக களமிறங்கியுள்ள சுமலதாவுக்கு அங்கு வலிமையாக உள்ள கர்நாடக மாநில விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோல கன்னட சேனா, நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கன்னட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சுமலதா பெயரில் மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கு எதிராக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ள நிலையில், அவரை வீழ்த்துவதற்காக அதே பெயரில் மூன்று பேர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தவிர்க்க, சுமலதா சித்தேகவுடா, சுமலதா மஞ்சேகவுடா, சுமலதா ஆகிய மூவரிடம் சுமலதா அம்பரீஷ் தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in