

பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்னாலேயே அதைத் தன்னிச்சையாக அறிவித்த எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
இளங்கோவன் ஈரோட்டில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,''ஈரோட்டில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால் வைகோவுக்கு ஒரேயொரு தொகுதி ஒதுக்கப்பட்டதாலும் அவர் ஈரோட்டை வலியுறுத்திக் கேட்டுப் பெற்றதாலும் அத்தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. எந்தத் தொகுதியில் எனக்கு சீட்டு ஒதுக்கப்பட்டாலும் அதில் நிற்பேன். எனினும் எனக்கு சீட்டு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் 40 தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காகப் பாடுபடுவேன்.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று ஏற்கெனவே காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதை 3 மாநிலங்களில் செய்தும் காட்டியது. அதையொட்டித்தான் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மோடி போல வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயலில் வீரராக காங்கிரஸ் இருக்கும்.
எச்.ராஜா ஒரு முந்திரிக் கொட்டை. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார். கட்சி மேலிடம் அறிவிக்கும்போது அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறாரா அல்லது ஆட்டுப்பட்டியில் இருக்கிறாரா என்பதைப் பார்க்கலாம்.
அதிமுக தோல்வி பயத்தில் மிரண்டு போயிருக்கிறது. டெபாசிட் வாங்குவதற்காக 1000 ரூபாயையும் 1,500 ரூபாயையும் அறிவித்தனர்'' என்றார் ஈவிகேஸ். இளங்கோவன்.