

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை தொகுதியில் போட்டியிடுகிறது. தமாகா சார்பில் நடராஜன் என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால், இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, கட்சித் தலைவரான ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 26 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. சைக்கிள் சின்னம் வழங்க குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒதுக்கியது.