‘தேமுதிக - தமாகாவை இழுக்க ஆலோசனை’ - மதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

‘தேமுதிக - தமாகாவை இழுக்க ஆலோசனை’ - மதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு
Updated on
1 min read

மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை நடத்தினார்.  தேமுதிகவையும், தமாகாவையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதை பற்றியும், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றியும் இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பாஜக மதுரை உள்ளிட்ட 5 தொகுதிகளை கேட்கிறது. ஆனால், மதுரையை விட்டுக் கொடுக்க அதிமுக தயங்குகிறது. மதுரைக்கு பதில் திருச்சியை விட்டுத் தருவதாக கூறுகின்றனர்.

ஆனால், 'எய்ம்ஸ்' மருத்துவமனையை கொண்டு வந்ததால் இந்த தொகுதியை பாஜக ஆரம்பம் முதலே குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. இதுதவிர அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிகவையும், தமாகாவையும் கொண்டு வருவதில் இழுப்பறி நீடிக்கிறது. அவர்களை எப்படியும் தங்கள் கூட்டணியில் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார். அவர், அவரது உடல்நிலை விசாரிக்க சென்றதாக கூறப்பட்டாலும் பாஜக பக்கம் செல்லும் படி விஜயகாந்தை செல்லும்படி வலியுறுத்தியதாகவும், பாஜகவின் தூதுவராகவே ரஜினி விஜயகாந்த்தை சந்திக்க சென்றதாகவும் தகவல் பரவியது. இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின், விஜயகாந்தை சென்று சந்தித்தார்.

திமுக, அதிமுகவின் கூட்டணி நகர்வுகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தார். அவர் விமான நிலையத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு அமித்ஷாவை விமானநிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன், விருதுநகர் எம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அவர்கள், தேமுதிகவையும், தமாகாவையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதை பற்றியும், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றியும், மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைப்பது சம்பந்தமாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கு மற்ற கட்சிகளை இழுக்கும் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் நிலையில் மதுரை விமான நிலையத்தில் அமித் ஷா-துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in