

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து எங்கிருந்து வந்தது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, ஆவடியில் ஞாயிற்றுக் கிழமை தேர்தல் பிரச்சாரம் நடை பெற்றது. கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்று பேசியதாவது:
நாடு நலிவுற்று இருக்கும்போது, நாட்டை விட உடம்பு என்ன முக்கியமா? எனது உடம்புக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை விட உங்களை காணும் போது கிடைக்கின்ற மருந்தே நல்ல மருந்து. நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண மக்களுக்கு கிடைத் திருக்கும் ஒரே வாய்ப்பு இந்தத் தேர்தல்.
காலால் நடந்து, கைககளால் தவழ்ந்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர்கள், அமைச்சர்களான பின் அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மக்களுக்கும் அதிகாரத் துக்கும் உள்ள தொடர்பை எளிதில் மறந்துவிடுகின்றனர். அவர்களை மாற்றும் வாய்ப்பை இந்த தேர்தல் மூலம் மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்றால் தேனாறு ஓடும் என்றும் பாலாறு பெருகும் என்றும் சொல்லப்பட்ட காலம் எல்லாம் பொய்த்துப் போனது. இங்கே தேன் ஓடவில்லை. இருந்த பாலாறும் காய்ந்துவிட்டது. இப்போது, இந்தியாவை ஆளப் போவது யார் என்ற கேள்விக்கு நாம் தான் விடை காண வேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் ஆள் நல்லவரா, நடுநிலையானவரா என்பதைப் பார்க்க வேண்டும். அண்ணா சொன்னதுதான் சேது சமுத்திரத் திட்டம் என்பதுகூட தெரியாமல், கட்சித் தலைவர்கள் உள்ளனர். ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறுகிறார் முதல்வர் ஜெயலலிதா. பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், அவர் சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு ரூபாய் சம்பளத்தில் அவர் வேலை பார்ப்பது உண்மைதானா? அதற்கு பெயர் சம்பளம் அல்ல கிம்பளம். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய அவருக்கு எங்கிருந்து 5 ஆயிரம் கோடி பணம் வந்தது? ஊரை ஏமாற்றுகிற ஒருவர் நமக்கு முதலமைச்சராக கிடைத்திருக்கிறார். இதுபோன்ற ஒரு அநியாயம் மீண்டும் நடைபெறக் கூடாது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.