

ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிட்டதைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடத்தி வருகிறது. இதில் தற்போதுள்ள நிலைப்படி கமல் தனித்துப் போட்டியிடும் சூழலே உருவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் ரஜினி - கமல் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சிக்காக அல்ல. நட்சத்திர நடிகரின் வரவேற்பு விழாவுக்காக அல்ல. சினிமா விழாக்களுக்காக அல்ல. எந்த விஷயத்துகாகவும் அல்லாமல் மக்களவைத் தேர்தலுக்காக ஒன்று சேருங்கள். ஆமாம். ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும்" என்று தெரிவித்தார்.
விஷாலின் இந்த ட்வீட்டை பலரும் ரீ-ட்வீட் செய்ய, இந்திய அளவில் ட்ரெண்டாகத் தொடங்கியது. இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் “மச்சான்.. இது எப்போது என்று தெரியுமா?” என்ற ட்வீட்டுடன் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டார்.
அதில் ரஜினி, கமல், சிவகுமார் மூவரும் அமர்ந்திருப்பதும், 'ஜெயலலிதா ஊழலுக்காக சிறைப்பட்ட போது, தீர்ப்பை எதிர்த்து 'ஜெ'வை ஆதரித்து நடிகர்களுடன் கமல் உண்ணாவிரதம்' என்ற எழுத்துகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தப் புகைப்படம் தவறானது என்று பலரும் கருத்து தெரிவிக்கவே, சில மணித்துளிகளில் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து “முதல் முறையாக போட்டோஷாப் செய்த புகைப்படத்தை சரி பார்க்காமல் பதிவிட்டுவிட்டேன். மன்னிக்கவும். நீக்கிவிட்டேன். என்னோட தவறு தான். எனது அட்மினுடையது அல்ல!” என்று ட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் தவறான இப்பதிவால் பலரும் அவரை சாடியும், கிண்டல் செய்தும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.