

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
பொருளாதார ரீதியாக சீனா வளர்ந்து வருகிறது. பல பொருட்களில் ‘சீன தயாரிப்பு’ என இருப்பதே இதற்கு சான்று. இந்த விவகாரத்தில் சீனாவை முந்த இந்தியாவால் முடியும்.
ஆனால், 120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தினமும் வெறும் 450 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகின்றன. ஆனால், சீனாவிலோ தினமும் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதை நான் சொல்லவில்லை. மக்களவையில் நிதியமைச்சகம் தாக்கல் செய்த புள்ளிவிவரத்தில்தான் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இதை ஒரு பிரச்சினையாகவே பார்க்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் நிலவு வதை அவர் தலைமையிலான அரசு ஏற்க மறுக்கிறது. நம் நாட்டில் வேலை யில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி தனது கருத்துகளை மட்டுமே மாணவர்களிடம் எடுத்து ரைக்கக் கூடாது. இதுபோல் மாணவர் களுடன் கலந்துரையாட அவர் முன்வர வேண்டும். வேலைவாய்ப்பு நிலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த இளைஞர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.
நம் நாட்டின் வளம் குறிப்பிட்ட சிலரின் கைகளில் குவிந்து கிடக்கிறது. இதுபோல மாணவர்களின் கல்விச் செலவில் பெரும் பகுதியை அரசே ஏற்க வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.