கூட்டணிக்கு சிக்கலாகும் தேமுதிகவின் அந்த 8 சட்டமன்ற தொகுதிகள்

கூட்டணிக்கு சிக்கலாகும் தேமுதிகவின் அந்த 8 சட்டமன்ற தொகுதிகள்
Updated on
1 min read

அதிமுக கூட்டணியில் இணைய சிக்கலாக உள்ள தேமுதிகவின் நிபந்தனைக்கு தேமுதிக போட்டியிட்ட 8 சட்டமன்ற தொகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழக தேர்தல்களம் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. கூட்டணியில் கட்சிகளை இணைப்பது மிக முக்கியம் என்பதை முந்திக்கொண்டு அதிமுக கூட்டணி சாதித்துவிட்டது.

பாமகவை கூட்டணிக்கு இழுத்ததன்மூலம் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி என்பதை மக்கள் முன் நிலை நிறுத்த முயல்கிறது. பாமகவை இழுத்த அதிமுகவால் தேமுதிகவை திட்டமிட்டப்படி இழுக்க முடியவில்லை காரணம் தேமுதிக அதிமுகவின் முக்கிய கண்டிஷனுக்கு ஒத்துவரவில்லை என்று கூறப்படுகிறது.

கேட்கும் தொகுதிகளை அளிக்க அதிமுக முன்வரத்தயார். ஆனால் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களை ஆதரிக்கவேண்டும் எதிர்த்து போட்டியிடக்கூடாது, ஆதரித்து பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதே அதிமுகவின் கண்டிஷன். ஆனால் அவை எதுவும் தேமுதிகவுக்கு ஒத்துவராததால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வென்று பின்னர் டிடிவி அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள், காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம், ஓசூர் தொகுதிகளில் 8 தொகுதிகளில் தேமுதிக நின்றுள்ளது. 1. ஓசூர் 2. ஆண்டிப்பட்டி 3. பாப்பிரெட்டிப்பட்டி 4. சோளிங்கர் 5. ஒட்டபிடாரம் 6. தஞ்சாவூர் 7. நிலக்கோட்டை 8. ஆம்பூர் ஆகிய 8 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டுள்ளது.

இந்தத்தொகுதிகளில் தனது நிலைப்பாட்டை விட்டுத்தர தேமுதிக தயாராக இல்லை எனக்கூறப்படுகிறது. ஆகவே ஒருவேளை திமுக கூட்டணிக்கு சென்றாலும் அதில் சில தொகுதிகளிலாவது கேட்டு நிற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in