

தமிழ் சமுதாயத்தின் அடுத்த தலைமுறைக்கு அறிவைக் கடத்தும் முக்கியப் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செய்துள்ளது.
தேசிய, மாநில அளவிலான போட்டித் தேர்வெழுதும் மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள், அரசியல், வரலாறு, இயற்பியல் என பல துறைகளில் உள்ளவர்களுக்கு பெரும் குறை, துறை ரீதியிலான தமிழ் புத்தகங்கள் பெருமளவில் இல்லையென்பதும், பல ஆண்டுகளுக்கு முன்பான துறைசார் வல்லுநர்களின் அரிய புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதும் தான்.
இந்தக் குறையைப் போக்க 1962 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட அரிய புத்தகங்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அந்தப் புத்தகங்களை சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அரங்கு எண்: 132, 133 இல் சென்று வாங்கலாம்.
இந்த அரங்கில், பண்டைக்கால நாகரிகங்களின் வரலாறு, பண்டைய இந்திய அரசியல் ஆட்சி நிலையங்கள், இந்திய வரலாறு, ரோமாபுரி வரலாறு என வரலாறு மட்டுமின்றி சமூகவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு, இயற்பியல் என 32 தலைப்புகளின் கீழான 875 அரிய தமிழ் புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. 40-50 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களைத் தேடி, நவீன முறையில் மீட்டுருவாக்கம் செய்வதென்பது எளிதல்ல.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆலோசகருமான அப்பணசாமி தன் முகநூல் பக்கத்தில், "வாழ்வின் பெரும் கனவுகளில் ஒன்று கண்முன் நிதர்சனமாகி வருகிறது. தமிழக கல்வித் துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான அரிய 875 தமிழ் புத்தகங்களை மீட்டு, மின்பதிப்பு செய்து, அச்சிலும் மறுபதிப்பு வெளியிட வேண்டும் எனும் நோக்கில் 21 மாதங்களுக்குள் தொடங்கிய பணி இன்று ஆவணப்பதிப்பாகத் தயாராகி உள்ளன. தமிழ் சமூகத்துக்கு அறிவுசார் துறைபோகிகள் 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய கொடை இது. இக்கொடையை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
நூல்களின் பட்டியலை ஒரு முறை பார்த்தால் நீங்களே அறிவீர்கள். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புத்தகங்களை கேட்பின் (டிமாண்ட்) அடிப்படையில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
தமிழ் அறிவுசார் சமுதாயம் இதற்கு அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே இந்த புத்தகங்களைக் காலத்துக்கேற்ப புதுப்பிப்பது, காலத்தில் மறைந்து போன அரிய தமிழ் புத்தகங்களைச் சேகரித்து மறுபதிப்பு செய்வது, நாட்டுடமையாக்க நூல்கள் மறுபதிப்பு, குழந்தைகளுக்காக ஆயிரம் புத்தகங்கள் உருவாக்கம், தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்வது, தமிழ் புத்தகங்களை பிற மொழிகளில் அறிமுகம் செய்வது எனும் தொடர் கனவுகள் சாத்தியமாகலாம்.
மட்டுமல்லாமல், புதிய பாடத் திட்டத்தில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பாட நூல்களும் விற்பனைக்கு உள்ளன. இதன் வடிவமைப்பு, மேலாய்வு ஆகியவற்றிலும் எனது சிறிய பங்களிப்பு உள்ளது" என்றார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "50 ஆண்டுகள் முந்தைய நூல்கள் என்பதால், அதனைத் தேடுவதற்கே ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டன. அதனை முழுவதும் கணினி வழி சரிபார்த்து மறுபதிப்பு செய்ய இரண்டு ஆண்டுகளாகின. தமிழ் வழியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளது. ஆங்கிலத்தில் அவர்கள் படித்தாலும், தாய்மொழியில் படிக்கும்போது புரிதல் அதிகமாகும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் 200 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. முக்கிய நூலகங்களுக்கும் அதனை அனுப்புகிறோம். மறுபதிப்பு மட்டுமின்றி அப்புத்தகங்கள் மின்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களுக்கென மெட்டாடேட்டாவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், எளிதில் அந்தப் புத்தகங்களைக் கண்டறியலாம்.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இதுதான் ரெஃபரன்ஸ். மிகவும் நம்பகத்தன்மையான புத்தகங்கள்" என தெரிவித்தார்.
இந்தப் புத்தகங்களுக்கு புத்தகக் கண்காட்சியில் நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவிக்கும் அப்பணசாமி ஆள் பற்றாக்குறை காரணமாக சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார். மொழிபெயர்ப்பு உள்ளிட்டவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் இந்தப் பணிக்கு வர வேண்டும் என்கிறார் அப்பணசாமி
புத்தகக் கண்காட்சி மட்டுமின்றி அஞ்சல் வழியாகவும் இந்தப் புத்தகங்களைப் பெறலாம். 1960 முதலான பாடநூல்களும், புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடநூல்களும் இங்கு விற்பனைக்கு உள்ளன.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in