

டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு 14 நாட்களாகிவிட்டன. இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. ஏராளமான ஆடு, மாடுகளும் இறந்துவிட்டன.
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் அழிந்து, எல்லோரையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டன. இந்த மரங்கள் அத்தனையையும் மறுபடியும் வளர்த்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே.
இந்தத் துயரில் இருந்து அவர்கள் மீண்டெழ, உணவு, போர்வை, பாய் தொடங்கி டெல்டா மக்களுக்கான அத்தனை அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிய தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்ய வேண்டிய அத்தனையையும் இந்தத் தன்னார்வலர்கள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.
எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீள முடியும் என நம்பிக்கை அளித்தவர்கள் இந்தத் தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமானவர்கள் இனியன், ஆன்மன், ‘மக்கள் பிரதிநிதி’ சரவணன், பிரேமா ரேவதி, சிவகுரு நாதன், ஷேக் முக்தார், ஷாஜகான், ஓவியர் நட்ராஜ், மணிமாறன், கார்த்திக் புகழேந்தி ஆகியோர்.
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை என டெல்டா மாவட்டங்களில் இவர்கள் மேற்கொண்ட பணி மகத்தானது. இவர்களில் பெரும்பாலானவர்கள், சமீபத்தில் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டபோது நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர்கள். அந்தக் குழுவுடன் மேலும் சிலர் சேர, ‘கஜா’வின் துயர் துடைக்கக் களமிறங்கினர்.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இந்த இரண்டு சமூக வலைதளங்களும்தான் இந்தக் குழு உதவிகளை ஒருங்கிணைக்க அடிப்படையாக இருந்தன. இந்தக் குழுவுக்குப் பணமாகவும் பொருளாகவும் அனுப்பியவர்களில் முகம் தெரிந்த நண்பர்களைவிடத் தெரியாதவர்கள்தான் அதிகம்.
தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தஞ்சாவூரிலும், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு நாகையிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு முகாம் அமைத்து உதவிகளைச் செய்தனர். இதற்கு முன்னர் நாம் எழுதிய மஹாராஜா மஹாலில் இருந்து உதவிகளைச் செய்தது இவர்கள்தான்.
இவர்கள் உதவிகளைச் செய்த விதத்தைப் பற்றித் தனியாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்குப் போனோம், பொருட்களைக் கொடுத்தோம் என்று இவர்கள் செயல்படவில்லை. உதவி என்று ஒரு ஊரில் இருந்து தகவல் வந்தால், இவர்கள் குழுவில் இருக்கும் ஒருவர் முதலில் அந்த ஊருக்குச் செல்கிறார். ஊரில் உள்ள எல்லா குடும்பங்களுமே பாதிக்கப்பட்டிருக்கிறதா அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனை என்பதைக் கணக்கெடுத்துக் கொள்கின்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
அப்படி டோக்கன் வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுநாள் காலையில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கட்டைப்பை வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு என சமைக்கத் தேவையான பொருட்களில் தொடங்கி, சோப், மெழுகுவர்த்தி, டார்ச் லைட், கொசுவர்த்தி, பாய் என குடும்பத்துக்குத் தேவையான அத்தனைப் பொருட்களும் அந்தக் கட்டைப்பையில் இருக்கின்றன. தேவைப்படுபவர்களுக்கு கொசுவலை, தார்ப்பாய் போன்றவற்றையும் வழங்குகின்றனர். இந்தப் பொருட்களைக் கட்டைப்பையில் பிரித்துவைக்க, தஞ்சாவூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே தேடிப்பிடித்து வழங்குவதால், இந்தக் குழுவினர் சந்தித்த சிக்கல்களும் அனேகம். இவர்களிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் கிடைக்காதவர்கள் சண்டைக்கு வர, உள்ளூர் ஆட்களின் உதவியுடன் அவர்களைச் சமாளித்திருக்கின்றனர்.
சில ஊர்களில் சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு இவர்கள் செல்லும் வாகனங்களை மறித்து, தங்கள் ஊர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பவும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அதற்கெல்லாம் இவர்கள் மசியவில்லை. நிவாரணப் பொருட்களுடன் சேர்த்து இரண்டு மரம் அறுக்கும் மெஷின்களையும் கையுடன் கொண்டு செல்கின்றனர். சாலையின் குறுக்கே போடப்படும் மரங்களை அறுத்துத் தூரமாகப் போட்டுவிட்டு, தாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இப்படி தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் 5000 குடும்பங்கள், திருவாரூரில் 1500 குடும்பங்கள், நாகையில் 3000 குடும்பங்கள் என கிட்டத்தட்ட 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இவர்கள் மூலம் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன.
அத்துடன், புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் இந்தக் குழு உதவியிருக்கிறது. மின்சார வசதி இல்லாததால் நீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டையில் மையங்களை ஏற்படுத்தி விண்ணப்பிக்க உதவியிருக்கின்றனர்.
அத்துடன் நின்றுவிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், பெற்றோரை இழந்தவர்கள், 10-ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் மற்றும் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைத்துப் பிரிவினர் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணத்தைத் தாங்கள் சேகரித்த நிவாரணத்தொகை மூலம் செலுத்தியுள்ளனர்.
‘கஜா’ புயல் கரையைக் கடந்து 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும், மக்களுடைய அடிப்படைத் தேவைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்தக் குழுவினரின் உதவியும் இன்னும் ஓயவில்லை.