

டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு 14 நாட்களாகிவிட்டன. இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. ஏராளமான ஆடு, மாடுகளும் இறந்துவிட்டன.
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் அழிந்து, எல்லோரையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டன. இந்த மரங்கள் அத்தனையையும் மறுபடியும் வளர்த்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே.
இந்தத் துயரில் இருந்து அவர்கள் மீண்டெழ, உணவு, போர்வை, பாய் தொடங்கி டெல்டா மக்களுக்கான அத்தனை அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிய தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்ய வேண்டிய அத்தனையையும் இந்தத் தன்னார்வலர்கள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.
எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீள முடியும் என நம்பிக்கை அளித்தவர்கள் இந்தத் தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமானது மஹாராஹா மஹால்.
தஞ்சை - திருச்சி சாலையில், தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மஹாராஜா மஹால். தஞ்சையிலே மிகப்பெரிய திருமண மண்டபமான இதில், ஒரே நேரத்தில் 1500 பேர் வரை அமரலாம். ஒருநாளைக்கு இதன் வாடகை மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் இருக்கும்.
ஆனால், இந்த மண்டபத்தை ‘கஜா’ புயல் நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகக் கொடுத்திருக்கிறார் இதன் உரிமையாளர் முகமது ரஃபீக். அதுமட்டுமல்ல, தன்னுடைய ‘மகாராஜா சில்க்ஸ்’ நிறுவனத்தில் இருந்து 3 ஆயிரம் கட்டைப்பைகளையும் கொடுத்து உதவியிருக்கிறார்.
இங்கிருந்துதான் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டக் கிராமங்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்திருக்கிறது தன்னார்வலர்கள் குழு ஒன்று. நிவாரணப் பொருட்களைச் சேகரித்து, ஒவ்வொரு குடும்பத்துக்குத் தேவையான பொருட்களைக் கட்டைப்பைகளில் பிரித்து, லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி இங்குதான் நடைபெற்றது.
இப்படி ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல... மொத்தம் 13 நாட்கள் இந்த மண்டபத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்றுள்ளன. 13 நாட்களுக்கும் மண்டபத்தை இலவசமாகக் கொடுத்து ‘கஜா’ வின் துயர் துடைக்கத் துணையாக நின்றிருக்கிறது மஹாராஜா மஹால்.